மார்களி மாதமழையில் நனைந்திருந்தது ஊர். அந்த விடியப்பறம் ஊருக்குள் ஏதோ அவலம் ஒன்று நேரப்போவதை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.
எங்களுக்காய் , எங்கள் சுதந்திரத்துக்காய் , எங்களது வாழ்வினை மட்டுமே எண்ணத்தில் இருத்தி எங்களுக்காகவே தங்களைக் கருக்கி எங்களுக்காகவே துப்பாக்கி து}க்கிய எம் தேசப்புதல்வர்களைத் தேடி ஊர்களைச் சு10ழும் இந்தியப்படைகள் அந்த விடியப்பறம் எங்களது ஊரையும் சு10ழ்ந்து கொண்டது.
கற்கரைப் பிள்ளையார் கோவில்ப்பக்கமாய் துப்பாக்கிச் சத்தங்கள் வெடித்து ஓய்ந்தது. அவர்கள் வருகிறார்கள் என அறிந்தால் 13 வயதான என்னையே அம்மாவும் அம்மம்மாவும் முழுப்பாவாடை கட்டுவித்து விடுவார்கள். நானும் முழுப்பாவாடை கட்டுகிறேன். சமாதிகோவிலடி நோக்கி இந்தியச் சப்பாத்துகள் திடும் திடுமெனக் குதித்தது.
"எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குப் போகணும். மீறி வீட்டுக்க இருக்கிறவங்க எல்லாம்
சுடப்படுவாங்க.... "ஒரு இந்தியச் சிப்பாய் ஒலிபெருக்கி மூலம் சொல்லிக்கொண்டு
போனான்.
ஊரே அந்த அறிவிப்புடன் கற்கரைப்பிள்ளையார் கோவில் வாசலில் குpவிகிறது. முழத்துக்கு ஒரு சிப்பாய் துப்பாக்கி வேலிபோட்டிருந்தான். குருதிப்பெருக்கொடு குமரிகள் , பிரசவம் முடிந்து 2,3 நாட்கள் முடியமுன்னம் வயிற்று நோவே ஆறாத வலியுடன் தாய்மார்களும் , எந்தபேதமுமின்றி குழந்தைகளிலிருந்து குடுகுடு கிழவர்
கிழவிகள் வரை கற்கரையான் வீதியில் ......
எல்லா முகங்களிலும் சாவின் பயம் அப்பியிருந்தது. புரியாத மொழி ,மனிதரை விழுங்கிவிடும் துப்பாக்கி மனிதர்கள் அங்குமிங்கும் ஓடித்திரிந்தது. கற்கரையான் ஆதிமூலத்துள்ளும் சப்பாத்துக்கால்கள்தான் நிறைந்திருந்தது. ஓம குண்ட மூடி திறக்கப்படுகிறது. வெளியிலிருந்த சிப்பாய் ஒருவன் ஆங்கிலம் தெரிந்த யாரையாவது எழும்பும்படி சொன்னான். ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருந்தும் யாரும் எழும்பவில்லை. இறுதியில் கிறிஸ்ணதாஸ் மாஸ்ரர்தான் எழுந்தார். ஆங்கிலம் தெரிந்தவர்களை எழும்பச் சொன்னவர்கள் கிறிஸ்ணதாஸ் மாஸ்ரருக்குக் காலால் எட்டி உதைத்தார்கள். சனக்கூட்டத்தில் இருந்த கிறிஸ்ணதாஸ் மாஸ்ரரின் மனைவி ராசாத்தியக்காவும் 10 வயது மகள் சுயாவும் அழுது கொண்டு எழத் துப்பாக்கிக் கழுகு ஒன்று அவர்களை நோக்கித் துப்பாக்கியை நீட்டி இருக்கப்பணித்தது.
அத்துடன் அவர்களின் அழுகை அடங்கிவிடுகிறது. அவர்கள் சொல்வதை அப்படியே மக்களுக்குச் சொல்லச் சொன்னான் அந்தக் கூட்டத்தின் தளபதி. கற்கரையான் மணல் வீதியில் இருந்தவர்கள் வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். தரம் பிரித்தவர்களில் எமது ஊர் இளைஞர்களில் ஒரு பகுதியினரை கோவிலுக்குள் அழைத்துப் போனார்கள். நடுத்தர வயதினரில் ஒரு பகுதியினரை சற்றுத்தள்ளி நிறுத்தி இரு கைகளையும் மேலே உயர்த்திப் பிடித்தபடி இரு கால்களையும் அகட்டி மேலே வானத்தைப் பார்க்க வைத்தனர். அப்படி நிறுத்தப்பட்டவர்கள் சற்று அசைந்தால் சரி. அந்த நபர் அவர்களால் உதைக்கப்பட்டு மீண்டும் அப்படி நிறுத்தப்படுவார். கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டவர்களின் கதறல் ஒலி வானைப்பிளந்து குப்பிளானையே நிறைத்துக் கொண்டிருந்தது.
கோவில் வெளிமணலில் இருந்த எங்களை அந்தக் கதறல்கள் நடுங்கவைத்துக் கொண்டிருந்தது.. பல இளைஞர்கள் ஓமகுண்டத்தில் இறக்கி ஏற்றப்பட்டு வதைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரெனக் கற்கரையான் பெரிய மணி ஒலிக்கிறது.
வெளியிலிருந்த மக்கள் வெள்ளம் 'பிள்ளையாரே அப்பனே ஆண்டவா..." கைகளை உயர்த்திக் கும்பிட்டனர்.
அந்த மணியோசைக்குப் பின்னால் மறைந்திருந்த சோகத்தின் பொருள் அப்போது யாருக்குமே புரியவில்லை. அடி,உதை,வதை,அழுகை கற்ரையான் வீதியெங்கும்....
புலி வாறதா...? சொல்லு ....! கிறிஸ்ணதாஸ் மாஸ்ரரைக் கேட்டான் அந்தக் கூட்டத்தின் தளபதி.
இல்லை...இஞ்சை ஒருத்தரும் வாறதில்லை...அருகில் நின்ற துப்பாக்கிக்காரன் கிறிஸ்ணதாஸ் மாஸ்ரருக்குத் துப்பாக்கியால் இடித்தான். இஞ்சை புலி வாறது ..... வந்தது...இஞ்சைதானிருக்குது ! மீண்டும் கர்ச்சித்தான் தளபதி. அங்கு குழுமியிருந்த மக்கள் கதறினர். இஞ்சை ஒருதரும் வாறேல்லை ஐயா.... இஞ்சை ஒருதரும் வாறேல்லை...அந்தக் கொடியவர்களின் காதுகளிற்கு அவை எதுவும் கேட்கவில்லை கண்ட பாட்டுக்கு உதைத்தார்கள். உண்மை சொல்லுறவரைக்கும் ஒருதரும் வீட்டை போறேல்லை.... தண்ணியும் இல்லை.....
கத்திவிட்டுக் கதிரையில் போயிருந்தான் தளபதி.
8 மணியாகிவிட்டது. பசியிலும் தண்ணீர்த் தாகத்திலும் குழந்தைகள் அழத் தொடங்கியது. நேரம் பகல் 11. கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிக்க அனுமதி கிடைக்கிறது. பசித்த வயிறுகள் தண்ணீரால் நிறைந்தது. கோயிலுள் அழுகையொலி ஓயாது கேட்டுக் கொண்டேயிருந்தது.
ஐயோ...அம்மா....இல்லை....தெரியாது...ஆ...அம்மா....ஐயோ... எத்தனை சீவன்களின் அவலக்குரலின் அழுகை.... அந்த ஆணவப்பேய்களின் காதுகளில் எதுவும்; எட்டவில்லை. பொழுது மதியப்பொழுதைத் தொட்டது. பேய்களின் அனியாயம் தணிகிறது.
கிறிஸ்ணதாஸ் மாஸ்ரரை அழைத்துச் சொன்னார்கள். புலி வந்தா உடனை எங்களுக்கு அறிவிக்க வேணும்...இல்லாட்டி எல்லாம் எல்லாம் அழிச்சுப்போடுவம்....
கோவிலுக்குள் ஓமகுண்டத்தில் வதைக்கப்பட்ட இளைஞர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். உடலெல்லாம் இரத்தக்கசிவு...வண்ணவண்ணமாய் உடையணிந்து வலம் வரும் சயிக்கிள்களில் மிடுக்காய்த் திரிந்த எமது ஊர் இளைஞர்கள் இன்று தலைகள் நிமிர்த்த முடியாத காயங்களுடனும் கண்ணீருடனும் நின்றனர்.
வதைக்கப்பட்டவர்களில் 9 பேரை விசாரணை செய்யப் போவதாக வாகனத்தில் ஏற்றிப்பறந்தது ஒரு கூட்டம். அவர்களின் உறவுகளின் அழுகையால் மீண்டும் அதிர்ந்தது கற்கரையான் வீதி. பேய்கள் வடக்குப் புன்னாலைக்கட்டுவன் நோக்கிப் போய் முடிந்தது. அதுவரையும் அந்தப் பேய்களின் நாற்றத்தில் நசுங்கிக் கிடந்த ஊர் இப்போது மெதுவாய் மூச்சு விடத்தொடங்கியது.
அடுத்து வந்த மூன்றாம் நாள் கற்கரையான் மேற்குப்பக்க தோட்டவெளி எருக்கும்பிப் புற்காட்டுக்குள் சனக்கூட்டம் நிறைந்தது. என்னவாம்....என்ன நடந்ததாம்.... கேட்டுக்கேட்டுச் சனம் நிறைந்தது அந்தவெளியில். அங்கு ஓர் இளைஞன் ஊதிப்பருத்து மணக்கப் பிணமாய்க் கிடந்தான். அவனது ஊர் வடக்குப் புன்னாலைக்கட்டுவன். அவன் உரில் பேய்கள் குடியிருப்பதால் அவனும் அவனது குடும்பமும் குரும்பசிட்டியில் இப்போது குடியிருக்கிறது.
அவன் எங்கள் ஊரால் தினமும் சந்தைக்கு வாழைக்குலை கொண்டு போவான். முந்தநாள் இவனும் அந்தப் பேய்களால் எங்கள் ஊர் வீதியில் கைது செய்யப்பட்டுக் கோவில் ஓமகுண்டத்தில் ஏற்றி இறக்கப்பட்டு வதைக்கப்பட்டவன். இவனது உறவுகள் யாரும் அந்த இடத்தில் இல்லாமையால் அவனைப் பெரிதாய் யாரும் கவனிக்கவில்லை.
அவனது பெற்றோர் அவனைக் காணாது தேடி இறுதியில் வடக்குப் புன்னாலைக் கட்டுவன் இந்தியப்படைகள் முகாமுக்கு நடையாய் நடந்தனர். ஆனால் அப்படி ஒருவனைத்தாங்கள் காணவே இல்லை என்று சொல்லி அனுப்பினார்கள். இவனது அம்மா கண்ணீரோடு தன் மகனை யாராவது கண்டீர்களா என எங்கள் ஊரவர்களைக் கேட்டழுத ஞாபகம் என் கண்களுக்குள் ஓடிவந்தது. என்னையறியாமலே எனது கண்கள் கண்ணீரில் நனைகிறது.
இந்த இளைஞன் அவர்களுக்கு என்ன செய்தான்....?
இவனை ஏன் கொன்றார்கள்.....?
இவன் எதற்காக இந்த எருக்கும்பிப் புழுக்களுடன் வீசப்பட்டான்.....?
விடைதெரியா வினாக்கள் அவை எண்ணத் திரையில் விழுந்து மறைந்தது. முந்தநாள் கற்கரையான் பெரியமணி 3 தரம் கோவில்க் குருக்களால் ஒலிக்க அவர்கள் பணித்ததன் பொருள்....வாழும் வயதில் உயிர் வேர் பிடுங்கப்பட்ட இவனின்
சாவைச்சொல்லவே ஒலிக்கவைக்கப்பட்டது.
கற்கரையான் சாட்சியாகக் கொல்லப்பட்டுக் கற்கரையான் இரவில் உலாவுவதாகச் சொல்லப்படும் அந்தத் தோட்டவெளியில் அந்த அப்பாவி இளைஞனின் உறவுகளின் அழுகை அந்த மாலைக்காற்றோடு கலந்து ஒரு சீவனின் சாவை ஊரெங்கும் சொல்லிக்கொண்டது.
வாழைக்குலை விற்றுவிட்டுப் பணத்தோடு வருவான் எனக் காத்திருந்தவர்கள் முன் அவன் பிணமாய்க் கிடந்தான். அவனது வாழைக்குலைச் சயிக்கிள் இனி எங்கள் ஊரால் வராது...அவனும் இனி வரமாட்டான்....இனி அவன் ஒருபோதும் வரவேமாட்டான்..... அவர்கள் மீண்டும் வருவார்கள் இன்னும் பல உயிர்களை அள்ளிக்கொண்டு போவார்கள். எங்கள் ஊர்போல் இன்னும் பல ஊர்களிலிருந்தும் அள்ளிக் கொண்டு போவார்கள் யாரையும் நாங்கள் கைது செய்யவில்லையெனச் சொல்வார்கள். எங்களது அச்சம் நிறைந்த விழிகள் அவர்களைக் கண்டு அஞ்சியளும். ஆனால் அவர்கள் வருவார்கள்.(இந்திய இராணுவகாலத்து நினைவுப்பதிவு)
0 Kommentare:
Kommentar veröffentlichen