பெஞ்சன் வடலி
பெரிய இலுப்பை
பிள்ளையார் வாசல்
பிரியமான நாவல்...
பேச்சியம்மன் கோவில்
பேய் வருமென்றாலும்
போய்வர விரும்பிய
இலந்தைக் கூடல்....
பசுமையாய்
பச்சையம் உலராப்
பத்துமணியிரவு.
பாலூறும் இரவுப்
பெளர்ணமி ஒளி.
விசாகப்படையலுக்கு
வீடுவீடாய் பொருள் சேர்த்து
விரித்த பாயில் பரப்பிய தானிய வகைகள்
பரந்த சமாதிகோவில் மடம்.
பாடலபாடம் படித்த
வீட்டு முற்றம்
பலா மா பழவகை தந்த தோட்டம் துரவுகள்
பகலிலும் கொள்ளையடித்த
பலட்டன் பனைவெளிப் பனங்காயின் இனிப்பு......
பால் தந்தே எமை வளர்த்த
பசுவும் அதன் சிசுவும்
பால்யகாலப் பலகதை நினைவும்
பாதிவாழ்வில் பயணம் முடிந்தும்
பசுமையின் இனிப்புடன்....
பிரியமாய் வளர்த்த செடிகொடி
பிரியாது எப்போதும் தொங்கிய
பீத்தல் வேலி.
பருவ மழையிலும்
பாறையாய் நின்ற பெரிய வேம்பு....
பேயறை அறையும்
வைகாசிக் காற்று
வளர்பிறை தேய்பிறை
முன்னிலா பின்னிலா
முழுவட்டம் அழித்த
பிறைநிலா
நினைவுகள் தேங்கிய மனசு.....
'எள்' என்று சொல்ல முதல்
எண்ணையாய் உருகிக்
குஞ்சியப்புவின் ஆணையை முடிக்கும்
சம்பரப்பேத்தியின்
ஒற்றைச் செல்வி குஞ்சி
ஓயாது அரைத்த அம்மியின் உடைவு
என்ன நிகழ்ந்தது எங்களுக்கு ?
அம்மம்மாவும் அரியமலர் அன்ரியும்
சின்னன்ரியும் சின்னமாமாவும்
பெரியமாமாவும் கடைசிமாமாவும் - என்
அம்மையும் அப்பனும் உலவிய வீடும்
என் தம்பியும் தங்கையரும்
அளைந்த செம்புழுதி நிலமும்
சொந்தமில்லையாம்
சொன்னவர் யார் ?
இரவு நொருங்கி அதிகாலை நெருங்கி
அலாரம் தலைதடவி
அதிகாலையை அறிவிக்க எழுகிறேன்
இன்னும் கொஞ்சம் உறங்கி
என் ஊரோடு கரைந்து
உலாத்த இயலாமல் எழுப்பிய
மணிக்கூட்டை எறியவா முடியும் ?
சமாதிகோவிலடியும் சாகாத நினைவுகளும்.
Eingestellt von
uyirvaasam
Mittwoch, 31. Dezember 2008
0 Kommentare:
Kommentar veröffentlichen